Tuesday, May 21, 2013

உஸ்தாத் ஓட்டல்

முதலில் கரீம் என்ற பெயரில் இருந்து ஆரம்பிக்கிறேன். கரீம் என்பதற்கு generous என்று அர்த்தம். கதாநாயகனின் பாட்டனாரின் பெயர். அல்லது அவரும் கூட ஒரு கதாநாயகன் என்றே சொல்லலாம். அடுத்தது கதாநாயகனின் பெயர் ஃபைசல். அதற்கு decisive என்று அர்த்தம் கொள்ளலாம். கதாசிரியர் அஞ்சலி மேனன் எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறார் என்பதற்கு இவை சில உதாரணங்கள். ஒப்பீட்டளவில் உஸ்தாத் ஓரளவுக்கு நமக்குப் பரிச்சயமான வார்த்தை. அதற்கு அர்த்தம் சொல்ல வேண்டியதில்லை!

ஒரு ஹாஸ்யமான கதை என்பது போல அமைந்த தொடக்கம். ஆனால் விஷய கனத்துடன் மனநிறைவைத் தரும் முடிவு என்று திரைக்கதையில் ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடி இருக்கிறார்கள். கதாநாயகி ஒரு interior designer என்று போகிற போக்கில் அறிமுகமாகிறார். படத்தில் ஒரு பூனை வருகிறது. கதாநாயகனுக்கு ஒரு band- இன் அறிமுகம் கிடைக்கிறது. இவை எல்லாமே பின்னர் கதையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. திரைக்கதையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை!

‘ஃபைசலின் கதை அவன் பிறக்குமுன்பே தொடங்கிவிட்டது’ என்று பின்னணியில் ஒரு குரல் கதையை ஆரம்பித்து வைப்பதும் படத்தின் இறுதிப்பகுதிகளில் ‘எல்லாம் விதிப்படி’ என்று ஃபைசல் தெளிவதும் பொருத்தம்.

‘சுபானல்லா சுபானல்லா’ என்ற பாடல் பின்னணயில் ஒலிக்கக் கோழிக்கோடு கடற்கரையில், விடிகாலையில் கரீம் சுலைமானியைச் சுவைக்கும் இடத்தில் இருந்து கதை சூடு / சுவை பிடிக்க ஆரம்பிக்கிறது. கெட்டிலில் இருந்து உதிக்கும் சூரியனின் பின்னணியில் கிளாசில் ஊற்றப்படும் சுலைமானியைப் பார்க்கும்போதே நாக்கில் எச்சில் ஊறியது.

‘பூமியில் சொர்க்கம் என்று ஒன்று உண்டென்றால் அது இங்கேதான் அது இங்கேதான் அது இங்கேதான்’ என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் முழுதும் குரலில் உற்சாகம். காட்சிகளில் ஒருவித பரவசம். தொடர்ந்து வரும் காட்சிகளில் பிரயாணி ரெடியாகிறது. விடிகாலைக் கோழிக்கோடு அழகாக இருக்கிறது. மொத்தம் ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கு வரும் அந்தப் பாடலும் காட்சிகளும் திரும்பத் திரும்பப் பார்க்கத் தூண்டுபவை.

அதன்பிறகு கதை நகரும் வேகமே தெரிவதில்லை. ஓட்டல் பற்றிய காட்சிகள் பிரயாணி என்றால் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையேயான காட்சிகள் சுலைமானி போல. மிகப் பொருத்தம்.

திரைக்கதைக்குச் சற்றும் குறைவில்லாத வசனங்கள். 'பாலையில் மழை பெய்த நாளில் சொர்க்கம் தூரத்தில் இல்லை' என்று கண்டுணர்ந்ததாகக் கரீம் சொல்லுமிடம் கவிதை. மேலும் சில உதாரணங்கள் சொல்லலாம்.

‘வயிறோடு மனத்தையும் நிறைப்பவனே நல்ல சமையல்காரன்’

‘மனிதனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது. சாதம் கொடுத்தால் மட்டுமே ஒரு கட்டத்திற்கு மேல் போதும் என்று சொல்வான்’

(மற்ற தானங்களை விட அன்னதானம் பெரிதாகப் போற்றப்பட இதுவும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன்).

படம் பார்த்துக்கொண்டிருந்தபோது அவ்வப்போது ஒரு விஷயம் குறுகுறுத்தது. ‘கரீம் செய்வது சரியா?’ என்பதே அது. அவர் செய்வது ஒரு விதத்தில் ‘moral hazard’ – இற்கு வழிவகுக்குமே என்று தோன்றியவண்ணம் இருந்தது. படத்தின் இறுதிக்காட்சிகளில் இந்த எண்ணம் மேலும் வலிவு பெற்றது. இந்த எண்ணம் மேசையின் இந்தப் பக்கம் இருக்கும் என் போன்றவர்களுக்கு என்றே நினைக்கிறேன். மேசைக்கு அந்தப் பக்கம் இருக்கும் கரீம், நாராயணன் போன்றவர்களுக்கு இல்லை. நிஜ வாழ்வில் ஜெமோ வாயிலாக அறிந்துகொண்ட ‘கெத்தேல்சாகிபை’ உதாரணமாகச் சொல்லலாம்.

ஒரு மாலைப்பொழுதில் இப்படத்தைப் பார்க்க நேர்ந்தால் இரவில் உறக்கத்தில் நல்ல கனவுகள் வரலாம். பகலில் பார்த்தால் அந்த நாள் உற்சாகமான ஒன்றாக இருக்கும்! 

Thursday, May 9, 2013

மீனின் சிறகுகள்

தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள் படித்ததில் இருந்து அவருடைய மற்ற படைப்புகளையும் படித்துவிட வேண்டும் என்ற உந்துதலில் வாங்கிய புத்தகம் இது.

பாலியல் உணர்வு தரும் கதைகளை நிறையப் படித்திருக்கிறேன். அதை வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கமேதும் இல்லை. அந்தக் கதைகள் ஒரு எல்லைக்குள் நின்றுவிடும். பதின்வயதில் அவற்றைப் படித்தபோது ஒரு கிளுகிளுப்பு உண்டாகும். கற்பனையில் அந்தக் கதைகளின் சம்பவங்கள் விரியும்போது சிறிது நேரத்திற்கு ஒரு இன்பத்தைக் கொடுக்கக் கூடியவை. அந்தக் கதைகள் போகக்கூடிய தூரம் அவ்வளவே.

Sunday, May 5, 2013

மற்றுமோர் இந்தியப் பயணம் 2

நினைத்தது போலவே நடந்தது. புதன் கிழமை மாலை விமானம் இருபது நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது. ஏகப்பட்ட கேள்விகள் மண்டையைக் குடைந்ததன.

தாமதமாகப் புறப்பட்டாலும் குறித்த நேரத்திற்கு விமானம் மஸ்கட் போய்ச் சேருமா?

தாமதமாகப் போய்ச் சேர்ந்தால் சென்னை விமானத்தைப் பிடிக்க நேரம் இருக்குமா?

விமானத்தை நாம் பிடித்தாலும் பெட்டிகளை மாற்றிவிடுவார்களா?

அவ்வளவு பெரிய கூட்டத்தின் முன்பு நகம் கடித்தல் தவறென்று பட்டது. கடிப்பதை நிறுத்தினேன்.

விமானத்தில் தமிழ், இந்தி, மலையாளப் பாடல்களைக் கேட்கும் வசதி இருந்தது. விஜய் யேசுதாஸ், ஜெயச்சந்திரன் பாடிய மலையாளப் பாடல்கள் சிலவற்றைக் கேட்டேன். அவை பதற்றத்தைக் குறைக்க உதவின.

சிறிது நேரம் கண்ணயர்ந்தேன். சாப்பாட்டு வாசம் மூக்கைத் துளைத்தது. எழுந்துகொண்டேன். இரவுணவு ஆயிற்று. மீண்டும் கண்ணயர்ந்தேன். ‘விமானம் தரையிறங்கப் போகும் அறிவிப்பு வந்தது. அதற்குள் இரண்டரை மணிநேரம் ஓடிவிட்டது.

மஸ்கட் விமான நிலையம் ஒப்பீட்டளவில் சிறியது. இட்லி, காபிக் கடைகள் இருக்கின்றன. புத்தகக் கடை ஒன்றும் இருக்கிறது. எதற்குமே நேரமில்லை. அடுத்த விமானம் பிடிக்க ஓடினேன். மணி மஸ்கட் டயம் விடிகாலை ஒன்றரை.

சென்னை செல்லும் விமானமும் தாமதமாகவே புறப்பட்டது. விமானத்தில் ஏறும்போதே ‘சொல்லிட்டாளே அவ காதலை’ என்ற காலர் டியூன்கள் கேட்டன. ஏற்கனவே சென்னை வந்து சேர்ந்துவிட்ட உணர்வு எனக்கு. ‘சொய்ங் சொய்ங்’ பாடல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

ஏறி அமர்ந்து கொஞ்ச நேரம் உறங்கியதும் மறுபடியும் தூக்கம் கலைந்தது. வேறென்ன, சாப்பாடுதான். உணவிற்குப் பிறகு கொஞ்ச நேரம் கண்ணயர்ந்தேன். மீண்டும் தரையிறங்கும் அறிவிப்பு. சென்னை வெயில் அன்புடன் வரவேற்றது. காலை ஆறரை மணிக்கே வெயில் உக்கிரமாக இருந்தது. கண்களைத் திறக்கவே முடியவில்லை.

குடியேற்ற நடைமுறைகள் மிக விரைவாக முடிந்தன. பெட்டி வந்துசேரக் கொஞ்ச நேரமானது.

கால் டாக்சி பிடித்து அண்ணா நகர் வந்தடைந்தேன். நண்பர் ஒரு Duplex வீட்டிற்குக் குடி மாறியிருந்தார். எனக்கு இதுபோன்ற வீடுகள் பிடிக்கும். மேலே கீழே ஏறி இறங்குவது நல்ல பயிற்சிதானே?

தூக்கம் கண்களை வாட்டியது. ஆனாலும் செய்ய வேண்டிய  வேலைகள் நிறைய இருந்தமையால் வேறு வழியின்றிக் குளித்துவிட்டு சாப்பிடக் கிளம்பினோம். வேறெங்கே, அண்ணா நகர் சரவணபவன்தான். சாப்பிட்டு முடித்ததும் சுகமான தூக்கம் வந்தது.

பாண்டி பஜார் செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறினேன். வலது நெற்றிப்பொட்டில் ஆணியை யாரோ அடிப்பது போன்ற வலி. ‘பாத்து சார்’  என்றார் டிரைவர். அப்போதுதான் புரிந்தது, கைப்பிடியில் இடித்துக் கொண்டிருக்கிறேன். தாங்க முடியாத வலி.

திரும்பத் திரும்ப நெற்றிப்பொட்டிற்கு அருகில் கையை வைத்து ரத்தம் வருகிறதா என்று பார்த்துக்கொண்டேன். இனி ஷேர் ஆட்டோவில் ஏறுவதில்லை என்று பிரசவ வைராக்கியம் போல ஒரு சபதம் வேறு எடுத்துக்கொண்டேன்.

பாண்டி பஜாரில் வேலை முடிந்ததும் கடற்கரை ரயில் நிலையம் நோக்கிப் பயணம். ஜ்யோவ்ராம் சுந்தர் அவர்களை அங்கே சந்தித்தேன். கோபிகிருஷ்ணனின் முழுத் தொகுப்பை எனக்காக வாங்கி வைத்திருந்தார். அதைப் பெற்றுக்கொண்டேன். கூடுதலாக மைனஸ் ஒன் (நந்தாகுமாரன்) என்ற கவிதைத் தொகுப்பையும் தந்தார். அங்கேயே சரவண பவனில் மதிய உணவு வாங்கிக்கொடுத்தார். தூக்கம் கண்களைச் சுழற்ற ஆரம்பித்தது.

அங்கிருந்து சிறிது தொலைவிலேயே புத்தகத் திருவிழா நடந்த வெலிங்டன் காலேஜ் இருக்கிறது. அங்கே போய்விட்டுப் போகலாம் என்று ஆட்டோ பிடித்தேன். ஆறு வரிசைகள் கொண்ட புத்தகத் திருவிழா வளாகம் அது. நான்கு வரிசைகள் மட்டும் பார்த்துவிட்டு நடையைக் கட்டினேன். அதற்குமேல் முடியவில்லை. நேரே நண்பரின் வீட்டிற்கு வந்து தூங்க ஆரம்பித்தேன்.

மாலையில் எழுந்தேன். மண்டை உடைந்து போகிற மாதிரி தலையை வலித்தது. இரவுணவிற்குப் பிறகு பஸ் பிடித்தேன். கும்பகோணம் வந்து சேரும் வரையில் எங்குமே விழிப்பு வரவில்லை.

கும்பகோணத்தில் இருந்த ஒரு வார காலத்தில் சில படங்கள் பார்த்தேன். சேட்டை படத்தின் பலமே வசனங்களும் காட்சி அமைப்புகளும். தமிழில் அவற்றைக் கொண்டுவரத் தவறிவிட்டார்கள்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற காவியத்தைக் கண்ணுற்றேன். இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கு விஜய் டிவி 'நமிபிக்கை நட்சத்திரம் ' என்ற அர்த்தம் வருமாறு ஒரு விருதைச் சில வருடங்களுக்கு முன்பு கொடுத்தார்கள். அதைத் திரும்பப் பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்யலாம்.

யாருடா மகேஷ் என்கிற இன்னொரு காவியத்தையும் கண்ணுற்றேன். உதயம்,  சென்னையில் ஒரு நாள், எதிர் நீச்சல் தேவலாம் ஒருமுறை பார்க்கலாம். எதிர் நீச்சல் படம் ஹவுஸ் புல். நம்பவே முடியவில்லை. சமீபத்தில் கும்பகோணத்தில் ஒரு காட்சிக்கு அரங்கு நிறைவது இப்போதுதான்

யுவன் சந்திரசேகரின் ஏற்கனவே சிறுகதைத் தொகுப்பில் மூன்று சிறுகதைகள் படித்தேன். நன்றாக இருந்தன. வெங்கட் சாமிநாதன் அவர்களைப் பற்றிய  தொகுப்பொன்றைக் கும்பகோணத்தில் வாங்கினேன் நல்ல முயற்சி ஒரு கட்டுரை வாசித்தேன் உதிரிப்பூக்கள் திரைக்கதை வசனம் வாங்கினேன். பார்த்த படம்தான் என்றாலும் மகேந்திரன் திரையில் சொன்னதைவிடக் கூடுதலாகப்  புத்தகத்தில் ஏதேனும் சொல்லி இருக்கிறாரா பார்ப்போம் என்ற குறுகுறுப்பு.

நீண்ட நாள்கள் கழித்து ஒரு நல்ல நாவலைப் படிக்க முடிந்தது. காம்யூவின் அந்நியன். 

மார்ச் 2012 இல் திருவண்ணாமலையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் யுவன் சந்திர சேகர் அவர்கள் மொழிபெயர்ப்பு பற்றிப் பேசியபோது ’வாசிக்கும்போது இதே விஷயத்தை மூலத்தில் எப்படி எழுதியிருப்பார்கள்  என்று வாசகனுக்குத் தோன்றாத வண்ணம் செய்வதே சிறந்த மொழியாக்கம்’ என்று அவர் குறிப்பிட்டார். 

அந்நியன் நாவலைத் தமிழில் வாசிக்கும்போது ஒரு கணம் கூட இது மூலத்தில் எப்படி எழுதப்பட்டிருக்கும் என்று தோன்றவே இல்லை.  மொழியாக்கம் திரு. வெ. ஸ்ரீராம் 

பைசைக்கிள் தீவ்ஸ் படம் பார்த்து முடித்ததும் இதில் ஒரு காட்சியும் வீணாகவில்லை என்று தோன்றியது. அதே  உணர்வை அந்நியன் நாவலைப் படித்து முடிந்ததும் உணர்ந்தேன்.

காம்யூவின் முற்றுபெறாத நாவல் ஒன்றையும் க்ரியா  காம்யூவின் நூற்றாண்டு வருடமான  2013 இல் வெளியிட இருப்பதாக அந்நியன்  நாவலுக்கான முன்னுரையில்  தெரிய வருகிறது. வந்துவிட்டதா தெரியவில்லை. அதையும் வாங்கிப் படித்துவிட வேண்டும்.
.
பயணத்தின்போது வாங்கிய மற்ற புத்தகங்கள்:

மனோதிடம் – பன்னாலால் படேல் – சாகித்ய அக்கடமி             
நாளும் பொழுதும் – ஜெயமோகன் - நற்றிணை 
சொல்முகம்– ஜெயமோகன் - நற்றிணை     

மீனைப் போல இருக்கிற மீன் – கல்யாண்ஜி – சந்தியா 
காஃகா - கதைகள், கட்டுரைகள், கடிதங்கள் – வ.உ.சி.
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி -  சிறுகதைகளும் குறுநாவல்களும் – கருத்து பட்டறை

சென்னைக்குவந்து சேர்வதில் ஒரு சிக்கல். பேருந்து கும்பகோணத்தில் இருந்து திருச்சி சென்று அங்கிருந்து சென்னை வந்தடைந்ததில் கொஞ்சம் கால தாமதம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை காலை எட்டரை மணிக்குச் சென்னை வந்தேன். கொஞ்ச நேர ஓய்விற்குப் பிறகு விமான நிலையம் வந்தடைந்தேன். ரியாத்திற்கு வந்து சேர்ந்தபோது மணி இரவு எட்டரை.

அடுத்த பயணம் எப்போது என்று மனம் இப்போதே ஏங்க ஆரம்பித்துவிட்டது. புத்தி அதற்கான திட்டங்கள் தீட்ட ஆரம்பித்துவிட்டது!

(நிறைந்தது)

Monday, April 22, 2013

மற்றுமோர் இந்தியப் பயணம்

என்னதான் நாலு கழுதை வயதானாலும் (இதையே பத்து வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்!) ஊருக்குப் போவதென்றால் ஒரு பதற்றம் கலந்த குதூகலம் தொற்றிக்கொள்ளவே செய்கிறது. ஜனவரி முதல் வார ஆரம்பத்தில் இங்கே வந்தேன். என்னவோ நீண்ட நாள்களாக ஊருக்குப் போகவில்லை என்பது போல ஒரு எண்ணம்.

மூச்சை அடக்கிக்கொண்டு தண்ணீருக்குள் இருக்கும் ஒருவன் சுவாசிப்பதற்காக நீரின் மேற்பரப்பிற்கு வந்து பிறகு மறுபடியும் நீருக்குள் மூழ்குவது போலத்தான் இந்த விடுப்புகளும் அதைத் தொடர்ந்து திரும்ப ரியாத் வருவதும். ஒவ்வொரு முறையும் ஊருக்குப் போய்வரும்போது ஊரின் நினைவுகளை இங்கே வந்து அசைபோட்டுப் பார்த்துக்கொண்டே நாளை ஒட்டுகிறேன், ஒட்டகம் அதன் திமிலில் கொழுப்பைச் சேகரித்து வைப்பது போல.

எதிர்ப்படுபவர்களை எல்லாம் புன்முறுவலோடு நோக்குகிறேன். அவசர வேலை எதுவும் கடைசி நிமிடத்தில் வந்துவிடக் கூடாது என்று விரும்புகிறேன். உடல் இங்கே இருக்கிறது. மனம் ஏற்கனவே இந்தியாவிற்குச் சென்றாகிவிட்டது. அது எப்போது இந்தியாவை விட்டு வெளியே வந்தது?!

ஒவ்வொரு பயணத்தின்போதும் நிரந்தரமாகத் தாயகம் செல்லும் யாரேனும் ஒருவர் அறிமுகமாகிவிடுவார். அவர்கள் முகத்தில் ‘அப்பாடா’ என்ற விடுதலை உணர்வும் கூடவே ‘இங்கே இவ்வளவு நாள்கள் இருந்துவிட்டோம். ஊரில் என்ன செய்யப்போகிறோம்’ என்ற லேசான கவலையும் இருக்கும். கொஞ்சமாகக் கவலை இருப்பது நல்லதுதானே? சிப்பிக்குள் புகும் சிறிதளவு மண் முத்தாகிறது. அதுவே அதிகமானால் சிப்பியையே கொன்றுவிடுகிறது. நிற்க, அவர்களைப் பார்க்கும்போது ‘நம் முறை எப்போது?’ என்று தோன்ற ஆரம்பித்துவிடும்.

விமானப் பயணங்களின்போது ஒருமுறை கூட யாரும் என்னை வந்து receive செய்ததில்லை. இது ஒரு பெரிய குறையாக எப்போதுமே தோன்றியதில்லை. ஆனால் ஒவ்வொரு முறை மற்ற பயணிகளை அழைத்துப் போக வந்திருக்கும் உறவினர்கள் / நண்பர்களைப் பார்க்கும்போது ‘நாமும் யாரையாவது வரச் சொல்லி இருக்கலாம்’ என்று தோன்றும். அது சில நிமிடங்களுக்குத்தான். யாரையும் காத்திருக்க வைப்பதில் எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. விமானம் தாமதமாக வந்தாலோ, குடியேற்ற நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டாலோ என்ன செய்வது, வெளியே உள்ளவர்கள் காத்திருக்க வேண்டியிருக்குமே என்ற எண்ணத்தில் யாரேனும் வருகிறேன் என்றால் கூட வரவேண்டாம் என்று சொல்லிவிடுவது வழக்கமாகிவிட்டது.

வழக்கம் போலவே இம்முறையும் ஊரில் மிக முக்கியமான வேலைகள் இருக்கின்றன. வெங்கட்ரமணாவில் சாப்பிடுவது, பெரிய திரைகளில் படம் பார்ப்பது, நான்கைந்து நாவல்கள் படிப்பது, நண்பர்களைப் பார்ப்பது, வெட்டி அரட்டை இத்யாதி. கோபிகிருஷ்ணனின் முழுத்தொகுப்பு, ஒரு நூற்றண்டுகாலத் தனிமை நாவலின் தமிழ் மொழியாக்கம் இரண்டும் கைக்கு வரும் அந்தத் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்.

இந்த முறை நினைத்த மாதிரி கச்சிதமாகப் பயணச் சீட்டுகள் வாங்க முடிந்தது! புதன் மாலை ஒன்பது மணிக்குக் கிளம்பி வியாழன் விடிகாலை 12 மணிக்கு மஸ்கட் வருகிறது. உடன் ஒரு மணிக்குக் கிளம்பி விடிகாலை ஆறு மணிக்குச் சென்னை!!

சென்னை - ரியாத் இன்னும் விசேஷம். வெள்ளி மாலை மூன்றரை மணிக்குச் சென்னையில் இருந்து கிளம்பி மஸ்கட் வழியாக ரியாத்திற்கு மாலை எட்டரைக்கு வந்து சேர்கிறது.

சமீபத்திய பயணங்களில் ஒன்றை நன்றாகப் புரிந்துகொண்டேன். இங்கிருந்து கிளம்பும்போது சென்னை அல்லாத பிற இந்திய விமான நிலையத்தை அடையக் கூடாது. அதுவும் டெல்லி, மும்பை கூடவே கூடாது. குடியேற்றம், பின்னர் உள்நாட்டு விமான நிலையத்திற்கு மாருவது என்று ஏகப்பட்ட சிரமம். திரும்ப வரும்போதும் இதே போன்ற தொந்தரவுகள்.

போலவே ரியாத்தில் இருந்து கிளம்பும்போது தமாம் செல்லக்கூடாது. குடியேற்றம் பெரிய இம்சை.

மஸ்கட் வழியே போவதில் இப்போது ஒரே ஒரு சிக்கல். மஸ்கட்டில் ஒரே ஒருமணி நேரம்தான் காத்திருப்பு. ரியாத்தில் இருந்து மஸ்கட் வந்து சேர்வதில் தாமதம் ஏற்பட்டால் பதற்றம் தொற்றிக்கொண்டுவிடும்.. பதற்றமே இல்லாமல் இருந்தாலும் வாழ்க்கை சுவைக்காதே!

இதைத் தாண்டிப் பதற்றம் தரக்கூடிய இன்னொரு விஷயமும் உள்ளது. சென்னை - கும்பகோணம் - சென்னை ரயில் சீட்டு வாங்குவதுதான் அது:-)

(பயணத் தேதிகள் 24 ஏப்ரல் - 3 மே)

Thursday, March 7, 2013

கிறுக்கல்கள் 07.03.2013

வியாழன் வெள்ளி வாரக் கடைசி என்பதில் இரட்டிப்பு அனுகூலம். விஜய் டிவியில் மார்கழி மகா உத்சவம் பார்க்க / கேட்க முடிகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் அவர்கள் போடும் 'சிறுத்தை', 'பயணம்' போன்ற மொக்கைகளில் இருந்து தப்ப முடிகிறது.

*
சுற்றுலா செல்வதற்கு நாற்பது பேருக்கு ஒரு பேருந்து தேவைப்படுகிறது. லாப நட்டமின்றி இருக்கவேண்டுமெனில் தலைக்கு நானூறு ரூபாய் தரவேண்டும் என்று கணக்குப் போடுகிறோம். திடீரென்று அறுபது பேர் வரவிருக்கிறார்கள் என்ற தகவல் வருகிறது. ஆக ஒன்றரைப் பேருந்து, தலைக்கு அதே நானூறு என்ற முடிவை எட்டுகிறோம்.அரைப் பேருந்து என்பது நடைமுறையில் கிடையாது. செலவுகள் கூடப் பிடிக்கும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஒன்றரைப் பேருந்து என்றுதான் நம் மக்கள் கணக்கை முடிப்பர் என்று நம்புகிறேன்.  டென்ஷன்
*
நான்: எனக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து ஒரு மெயில் வந்திருக்கு. எனக்கு அவங்க பணம் அனுப்பப் போறாங்கலாம். என்னோட அக்கௌன்ட் நம்பர் கேக்குறாங்க.

நண்பர்: நீ ரொம்பப் பெரிய ஆள் இல்லையா? அதான் அவ்ளோ பெரிய பேங்கே பணம் தராங்க.

நான்: ம்ம், அப்படிப் பாத்தாலும் எனக்கு வேர்ல்ட் பேங்கில் இருந்துல்ல மெயில் வரணும்?

நண்பர்: ஒன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசமுடியுமா?
*
ஆயிரத்தில் ஒருவன்

யூ டியூபில் எதையோ தேடப்போக ஆயிரத்தில் ஒருவன் கிட்டியது.  பாதி படத்தைப் பார்த்தேன். தியேட்டரில் மட்டும் கிட்டத்தட்ட ஏழெட்டு முறை இந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன்.

பயணம், குறுக்கிடும் இடர்கள், அதிலும் குறிப்பாகக் காட்டுவாசிகள் தாக்கும் கட்டம் மிகவும் பிடித்த அம்சங்கள். படம் முழுதும் பின்கதைச் சுருக்கம் அவ்வப்போது ஓவியங்களால் காட்டப்படும். அதுவும் பிடித்திருந்தது.

பிடித்த இன்னொரு அம்சம் பாடல்களும் இசையும். 'நெல்லாடிய நிலமெங்கே' பாடலில் நித்யஸ்ரீ பாடும் பகுதிகள் எம் எஸ் அவர்கள் பாடிய 'மறவேனே எந்நாளிலுமே கிரிதாரி உனதருளே' பாடலின் அதே ராகத்தில் அமைந்திருக்கிறது.

லண்டன் சென்றிருந்தபோது Stonehenge என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன். லண்டனில் இருந்து அறுபது மைல்கள் என்று நினைவு. அங்கே பெரிதாக ஒன்றுமில்லை. கற்களை விதவிதமாக அடுக்கி வைத்திருப்பார்கள். ஆனாலும் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் அந்த இடத்தைப் பற்றி. அந்த இடத்தைப் பற்றி ஏகப்பட்ட மர்மங்கள் உண்டு. ஆயிரத்தில் ஒருவன் படத்தில் அடுக்கி வைக்கப்பட்ட கற்களின் மேல் விழும் சூரிய ஒளி நடராஜரின் உருவமாக நிழலாக பூமியில் விழும். Stonehenge கற்களைப் பார்த்ததும் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் அந்தக் கட்டம்தான் நினைவிற்கு வந்தது.

படத்தின் இறுதிப் பகுதிகளில் பார்த்திபனும் கார்த்திக்கும் ஆடும் நடனமும் இசையும் மிகவும் பிடிக்கும். அந்த இசைக்காகவே குறுந்தகடும் வாங்கினேன்.
*
டயட்டீஷியன்: சாப்பிட இருபது நிமிஷம் அல்லது அதுக்கும் அதிகமான நேரம் எடுத்துக்கிட்டா வெயிட்டு போடாது.

நான்: அப்போ பொழுதன்னைக்கும் சாப்பிட்டுக்கிட்டே இருந்தா வெயிட்டு போடாதுன்னு சொல்றீங்களா?

அவர் விட்ட லுக்கை எப்படி வர்ணிப்பது?

"ஒன்னைய பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா?" என்று மனதிற்குள் நினைத்திருப்பார்.
*
நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் தொடக்கப் பள்ளியில் / மேனிலைப்பள்ளியில் பயின்றுகொண்டிருந்த காலம். பொங்கல் சீசனில் பொங்கல் வாழ்த்து அட்டைகளை மொத்தமாக வாங்கித் தெருமுனையில் கடை போட்டு விற்பார் பக்கத்து வீட்டு அண்ணன். அவர் சாப்பிடப் போகும் நேரங்களில் நான் கடையைப் பார்த்துக்கொள்வேன்.  நெம்ப நல்லவன்.  நம்பலாம்.

வாழ்த்து அட்டைகள் தவிர வாழ்த்து அட்டையின் மேல் 'நன்றி' என்று எழுதிய அட்டைகளும் இருக்கும். வாழ்த்து அனுப்பியவர்களுக்குத் திருப்பி அனுப்ப 'நன்றி' என்று எழுதிய அட்டைகள். ?

எனக்குத் தெரிந்த நண்பர்கள் இருவர் ரொம்பவே நெருக்கம். ஒருவருக்கு என்ன மாதிரியான அட்டை பிடிக்கும் என்று மற்றொருவர் அறிந்து வைத்திருப்பார். அந்த அட்டையை வாங்கி அனுப்பிவைப்பார். பின்னர் நன்றி அட்டைகளும் பரஸ்பரம் அனுப்பி வைக்கப்படும். தபாலில் டெலிவர் ஆகி முடிந்ததும் நான்கு அட்டைகளையும் வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் பேசித் தீர்ப்பார்கள்.

இப்போதெல்லாம் பொங்கல் வாழ்த்து அட்டைகள் வருகின்றனவா என்று தெரியவில்லை.
*
பொன்னியின் செல்வன் பற்றி ஒரு பதிவு பார்த்தேன்.  பழைய நினைவுகள் வந்தன. ஒரு வெள்ளிக்கிழமை மாலை. மாதுங்காவில் டிபன் சாப்பிட்டுவிட்டு கிரி ட்ரேடிங் விஜயம்.

வானதி பதிப்பகப் பிரதி. கெட்டி அட்டைகளுடன் ஐந்து பாகங்கள். வாங்கக் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. விலை அப்போது 625 ரூபாய் என்று நினைவு. அது தயக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது. புத்திக்கும் மனதிற்கும் போராட்டம். வழக்கம்போல் வென்றது மனமே.

ட்ரெயினில் வரும்போது பிரித்துப் பார்க்க முடியவில்லை. மும்பையில் ட்ரெயினில் பயணம் செய்வதே ஒரு வித்தை. அதிகப்படியாக வேறெதுவும் செய்துவிட முடியாது. குர்லா வந்திறங்கி பஸ்சிற்கு மாறியதும் பிரித்தேன்.

முன்னுரையில் ராஜாஜி இரண்டாயிரம் பக்கத்துக்கும் அதிகமான பக்கங்கள் என்று பயமுறுத்தினாலும் அவ்வளவாக பயமில்லை. பொன்னியின் செல்வன் படிக்குமுன் விக்ரம் சேத்தின் A Suitable Boy என்கிற 1038 பக்க நாவலைப் படித்து முடித்திருந்தேன். அதுவும் அது ஆங்கில நாவல்.

வீட்டிற்கு வந்து டிவியைப் போட்டுவிட்டுப் படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரம் கழித்து அழைப்பு மணியோசை. உடன் வசிப்பவர் வந்தார். இடதுகையில் புத்தகத்துடன் வலதுகையால் கதவைத் திறந்தேன். அவருடைய "ஹாய்"க்கு பதில் சொன்ன நினைவு இல்லை.

"டிவில என்ன புரோகிராம்?" என்று கேட்டார். "தெரியாது" என்றேன் புத்தகத்தில் இருந்து கண்ணை எடுக்காமல்.

விடிய விடியப பின்னர் விடிந்தும்  நான்கு பாகங்களைப் படித்து முடித்த நினைவு. ஐந்தாம் பாகம் படிக்க அதன் பிறகு வீட்டில் நேரம் வாய்க்கவே இல்லை.

அதற்கடுத்த வாரத்தில் நண்பர் ஒருவருக்கு பெங்களூரில் திருமணம். டே எக்ஸ்பிரஸ் வண்டி. ஐந்தாம் பாகம் முடிந்தது. 

Saturday, March 2, 2013

ஆழி சூழ் உலகு

"எண்ணிலடங்காத வாய்ப்புகளைத் தன்னிடத்தே கொண்டது. அமைதியாய் இருந்தும், கொதித்தும் தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொண்டே இருக்கிறது."

"எத்தனை முறை பார்த்தாலும் முதல்முறை பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தருவது."

*

நன்றாக நினைவிருக்கிறது. கடலை நேரில் பார்க்குமுன் அதைப் பற்றிக் கேள்விப்பட ஆரம்பித்திருந்தேன். மூன்று புறமும் நீரால் ஆனது அதனால் தீபகற்பம் என்று பெயர் என்று இந்தியாவைப் பற்றி ஆரம்பப் பள்ளிகளில் படித்த நினைவு இருக்கிறது. பின்னர் வரைபடங்களில் கடலின் பெயர்களைக் குறித்திருக்கிறேன். சில சமயங்களில் மாற்றியும் குறித்திருக்கிறேன். குழந்தைகள் உலகில் இதெல்லாம் சர்வசாதாரணம்.

நான் முதன்முதலாகத் தரிசனம் கொடுத்தது வங்காள விரிகுடாக் கடலுக்குத்தான். வயது எட்டு அல்லது ஒன்பது இருக்கலாம்.  பூம்புகார் செல்லும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தோம். அப்போது வழியெல்லாம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பஸ் பயணம்  கிட்டத்தட்ட மூன்று மணிநேரம். பூம்புகார் வந்ததும் மீனவர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றோம். கடலை எப்போது பார்ப்போம் என்ற ஆர்வத்தில் எனக்கு உறக்கம் வரவில்லை. மற்ற அனைவரும் களைப்பில் உறங்கிவிட்டனர்.

மாலை வந்தது.கடற்கரைக்குக் கிளம்பினோம். போகும் வழியெங்கும் வலைகள், கருவாடுகள். கடலை முதல்முறை பார்த்தபோது எப்படி இருந்ததென்று இப்போது சொல்லத் தெரியவில்லை.

கரையெங்கும் கட்டுமரங்கள். அதில் ஏறி போட்டுக்குச் செல்லும் மீனவர்கள், மணலில் கால் புதையப் புதைய நடந்தது, எங்கிருந்தோ தோன்றி என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் மணலில் மறைந்துவிடும் நண்டுகள், வானும் நீரும் நிஜமாகவே தொட்டுக் கொள்கின்றனவா என்று மற்றவர்களிடம் கேட்டது - இவையெல்லாம் நினைவில் இருக்கின்றன.

மறுநாள் குளிக்க அனுமதி கிடைத்தது. முழங்கால் ஆழம் வரை மட்டுமே செல்ல அனுமதி. ஒவ்வொரு முறை அலையடிக்கும்போதும் உள்ளாடைக்குள் மணல் புகுந்தது.  இடுப்பு வரை ஆழத்திற்குச் செல்ல அனுமதி கிடைத்தது. ஆனால்  பெரியவர்களின் கையை எப்போதும் பிடித்தே இருக்கவேண்டும் என்ற  நிபந்தனையுடன்.

ஓரிருவர் கொஞ்சம் ஆழத்திற்குப் போய் நீந்தத் தெரியாது நீரை விழுங்கிவிட அவரைக் கரைக்குத் தூக்கி வந்து சிகிச்சை அளித்த காட்சிகள் நினைவில் இருக்கின்றன. 

அடுத்துப் பல வருடங்களுக்குக் கடலைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. திருநெல்வேலிக்கு ஒருமுறை போனபோது (1998) திருச்செந்தூர் போகும் சந்தர்ப்பம் வாய்த்தது. கடற்கரைக் கோவில் என்றால் என்ன என்பதை முதன்முதலாக நேரில் பார்த்தபோது புரிந்தது. தனியாகச் சென்றதால் குளிக்கத் தயக்கம். என்னைப் போலவே தனியாக ஒருவர் வந்திருந்தார்.

அவரே வலிய வந்து பையைப் பார்த்துக்கொள்கிறேன் என்றார். தயக்கம் கூடியது. 'அட, சந்தேகப்படாதீங்க. நான் மதுரைல ஒரு ஸ்கூலில் வாத்தியாரா இருக்கேன். தைரியமா போங்க' என்றார். அரை நம்பிக்கையுடன் குளிக்கச் சென்றேன். பின்னர் நாழிக் கிணறு. அவர் குளித்து வரும்வரை அவருடைய உடைமைகளைப் பார்த்துக்கொண்டேன்.

பின்னர் ஒருமுறை (2008) நவபிருந்தாவனத்திற்குச் சென்றபோது துங்கபத்ராவில் நீராடும்போது ஒரு மதுரைக்காரர் அறிமுகமானார். எனக்கு அப்போது திருச்செந்தூரில் சந்தித்த மதுரைக்காரரின் நினைவு வந்தது.

பின்னர் அங்கலேஸ்வருக்கு ஒருமுறை சென்றிருந்தேன் (2000). ஒரு வாரக்கடைசியில் டாமன் செல்லும் வாய்ப்பு கிட்டியது. வெறும் கட்டாந்தரையாக இருந்த இடததில் மதியத்திற்கு மேல் கடல் நீர் (tide) வரும் என்று சொன்னபோது முதலில் நம்ப முடியவில்லை. பின்னர்ப் படிப்படியாக நீர் முன்னேறி வருவதைப் பார்த்ததும் நம்ப முடிந்தது.

அடுத்து மும்பைக் கடற்கரைகள். Juhu பீச், சௌபாட்டி பீச், Gate way of India, மும்பையில் இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கும் பீச் (பெயர் நினைவில் இல்லை) எல்லாம் பார்த்தேன்.

2003 ஆம் ஆண்டு வாக்கில் கோவா சென்றிருந்தேன். தங்கியிருந்த ஓடட்டலுக்கென்று பிரத்யேக பீச் உண்டு. நல்ல ஆழமான பீச். நன்றாக நீந்திக் குளிக்கும் வசதி இருந்தது. காலை மாலை இருவேளையும் குளியல். மதியம் அனைத்துவிதமான கடல் உணவு வகைகளுடன் சாப்பாடு. 

கோவா பயணத்தில் சிகரம் வைத்தாற்போல ஒரு கசிநோவுக்குச் சென்றிருந்தேன். பத்தாயிரம் ரூபாய் அவுட். பாட்டும் கச்சேரியும், சீட்டும், சூதுமாக ஒரு இரவு கழிந்தது. முதன் முதலாக  மதுவைச் சுவைத்தது அப்போதுதான். தண்ணீர் என்றெண்ணி ஓட்காவைக் குடித்துவிட்டேன்.

பிரசத்தி பெற்ற மெரீனா பீச்சைப் பார்க்கும் சந்தர்ப்பம் 2003 -இல் வாய்த்தது. Life is colourful என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்யும் ஓரிடம்.  


மீண்டுமொருமுறை திருச்செந்தூர் செல்லும் வாய்ப்பு கிட்டியது. அம்முறை கன்னியாகுமரிக்கும் சென்றுவந்தேன். அது ஒரு அவசர ட்ரிப். கன்னியாகுமரிக்கு மீண்டும் ஒரு முறை(யாவது) செல்லவேண்டும்.

2006 இல்  ஒரு ஜூன் மாத மாலைப்பொழுது. விமானம் JFK விமான நிலையத்தில் தரை இறங்குகிறது. ஜன்னல் வழியாகப் பார்த்தால் நீல நிற நீர்ப்பரப்பு. அவ்வளவு அருகில் கடலை மேலிருந்து பார்ப்பது அதுவே முதல்முறை. வார்த்தைகளில் விவரிக்க முடியாத அனுபவம். 

2007 ஆடி அமாவாசை. வெடித்துச் சிதறிவிடுவேன் என்கிற அளவிற்கு மனக்கொதிப்பு இருந்த காலகட்டம். திவ்யதேச யாத்திரை. திருப்புல்லாணி சென்றேன். இயல்பாக அமைந்துவிட்ட பயணமது. சேதுக்கரை வரை காரில் செல்லமுடியாத கூட்டம். நல்ல மதிய வெயில். நடந்தே சேதுக்கரைக்குச் சென்றேன். பூம்புகார் நினைவுகள் மனதில் ஓடின.

அலையடிக்கும் சேதுக்கரை, பித்ருக்கடன் செய்பவர்கள், செய்விக்கும் வேதியர்கள், கையில் மாற்றுத் துணி இருந்தும் அன்று குளிக்கத் தோன்றவில்லை. அமாவாசையாக இருந்தும் அப்பாவிற்காகத் தர்ப்பணம் கொடுக்கத் தோன்றவில்லை   1

வாகன ஓட்டியாக வந்தவர் கிட்டத்தட்டக் கெஞ்சினார். ராமேஸ்வரம் வெகு அருகில், அவசியம் போவோம் என்றார். பிடிவாதமாக மறுத்துவிட்டேன். டிரைவர் ஒன்றும் புரியாமல் என்னை ஏற இறங்கப் பார்த்தார்.

"பெருமாள் கோவில் மட்டும்தான் போவீங்களா?" என்றார். "அதெல்லாம் இல்லையே, நாம நேத்துத் திருப்பத்தூர் போனோமே? என்று மறுத்தேன். 'பின்ன ஏங்க ராமேஸ்வரம் வேணாம்னு சொல்றீங்க? எங்கேருந்தேல்லாம் வராங்க தெரியுமா?" என்றார். என்னவோ போகத் தோன்றவே இல்லை அப்போது. #  Strange 2

2008 -இல் தென் கர்நாடகப் பயணத்தின்போது முருதேஷ்வர் பீச் பார்த்தேன். மீண்டும் ஒரு கடற்கரைக் கோவில். உடன் திருச்செந்தூர் நினைவு வந்தது. உடுப்பியில் பீச் பார்த்தேன். அடுத்து மங்களூரில். எத்தனை முறை பார்த்தாலும் கடல் புதிதாகவே இருக்கிறது. 

2012 மே மாதம். ராமேஸ்வரம் கடற்கரை. விடிகாலை ஐந்தரை மணிவாக்கில் ஜனத்திரளாக உள்ள கடற்கரை. எங்கும் மந்திர ஒலிகள். நீத்தார் கடன் செய்யும் ஒவ்வொருவரின் முகத்திலும் எந்த நொடியும் இமைத் திரைகளை மீறிக் கண்ணீர்த் துளிகள் கொட்டிவிடக் கூடும். முகத்தைத் திருப்பிக்கொண்டும், கீழே குனிந்துகொண்டும் அதை சமாளிக்கப் போராடுபவர்கள். அவர்களில் இருந்து முற்றிலும் முரண்பட்டுத் தாரை தாரையாகக் கண்ணீர் வடிப்பவர்கள்.

வேதியர் சொன்ன மந்திரங்களையும் அப்பாவின் முகத்தையும் ஒருசேர மனதில் நிறுத்த முயலும்போதெல்லாம் மனம் கொந்தளித்தது. கண்ணீர் முட்டியது. மனதை  சாந்தப்படுத்தவும் பீறிடும் துக்கத்தைக் கடலில் கரைத்துவிடவும்தான்  அடிக்கடி கடலில் முழுக்குப் போடச் சொல்கிறார்களோ என்னவோ? கடலுக்கும் கரைக்கும் மூன்று முறை நடந்தேன்.

உச்சக்கட்டம் கடலில் இருந்து மணலை அள்ளி எடுத்துவந்து சிவலிங்கம் பிடித்து, அதற்குப் பூஜைகள் செய்து அதை மீண்டும் கடலில் கொண்டுபோய்க் கரைப்பதுதான். அதை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.சில உபநிஷத வரிகள் மனதில் ஓடின.

*


“உங்களைப் பொறுத்தவரை கடல் என்பது என்ன?” என்ற வினாவிற்கு லண்டனில் உள்ள க்ரீனிச் மெரிடைம் (Greenwich Maritime) அருங்காட்சியகத்தைப் பார்வையிட்ட இருவரின் பதில்களே / கருத்துக்களே பதிவின் ஆரம்பத்தில் வருபவை.

Friday, March 1, 2013

அழகியான் தானே அரியுருவன் தானே

நேற்று நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது ஹைதராபாதில் வசிக்கும் இன்னொரு நண்பரைப் பற்றிப் பேச்சு திசைமாறிச் சென்றது. தொடர்ந்து நான் அவர் வீட்டிற்கு விஜயம் செய்தது, பின்னர் அவர், இன்னொரு நண்பர், நான் மூவரும் யாதகிரி குட்டாவிற்குச் சென்றது என்று நினைவுகள் கிளைவிட்டன. கடைசியில் அவை நரசிம்ம க்ஷேத்திரங்களில் நிலைகொண்டன.

நாளை என்பதே நரசிம்மனிடத்தில் இல்லை என்பர். குமுதம் ஜோதிட இதழ் எடிட்டர் திரு. . ஆர். ராஜகோபாலன் அவர்கள் எழுதிய புத்தகமொன்றில் (புத்தகத்தின் பெயர் நினைவில் இல்லை) நரசிம்மனின் கருணை குறித்து மிக அழகாக விளக்கி இருக்கிறார்.

க்ஷணத்தில் சிம்மமாகத் தோன்றிய அவதாரம் நரசிம்மம். 'என் நாராயணன் எங்குமிருப்பான்' என்று பிரஹலாதன் சொன்னவுடன் கணக்கற்ற உருவங்கள் எடுத்து எல்லாத் துரும்புகளிலும் குடிகொண்டான் நாராயணன்.

அழகியான் தானே அரியுருவன் தானே
பழகியான் தாளே பணிமின் - குழவியாய்த்
தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே
மீனா யுயிரளிக்கும் வித்து.
 -ஆழ்வார்

அரியுருவை அழகு என்கிறார் ஆழ்வார். நரசிம்மம் எப்படி அழகாக முடியும் என்று கேட்போம். இங்கு சொல்லப்படுவது திருமேனியின் அழகு இல்லை. திருவுள்ளத்தின் அழகு. பக்தனின் வாக்கை மெய்ப்பிக்கும் பொருட்டு க்ஷண நேரத்தில் சகல துரும்புகளிலும் குடிகொண்ட கருணை. நரசிம்மனை அழகிய சிங்கர் என்று அழைப்பது பொருத்தம்தானே.

ஒரு ஆர்வத்தில் இதுவரை சேவித்திருக்கும் நரசிம்ம க்ஷேத்திரங்களை வேறொரு பதிவில் எழுதியிருந்ததை இன்று மீண்டும் படித்தேன். இன்னும் பார்க்கவேண்டியவை நிறைய இருக்கின்றன. எப்போது சேவித்து முடிப்பேன் என்று தெரியவில்லை.

1. சோளிங்கர் (நூற்றெட்டில் ஒன்று)
2. பூவரசங்குப்பம் (விழுப்புரம் அருகில்)

3. பரிக்கல் (விழுப்புரம் அருகில்)


4. சிங்கர் கோயில் \ சிங்கிரி குடி (பாண்டி அருகில்)
5. சிங்கபெருமாள் கோயில் (சென்னை அருகில்)

6. திருவேளுக்கை (காஞ்சிபுரம், நூற்றெட்டில் ஒன்று)


7. அந்திலி (திருக்கோவிலூர் அருகில் உள்ளது)
8. சிங்கர்குடி (இது வேறு சிங்கர்குடி, பாண்டி அருகிலும் ஒன்று உள்ளது. வேலூர் திருவண்ணாமலை சாலையில் உள்ளது. கொஞ்சம் உள்ளே செல்ல வேண்டும்)

9. நாமக்கல்


10. திருவாலி திருநகரி (நூற்றெட்டில் ஒன்று, சீர்காழி அருகில் உள்ளது)
11. மேல்கோட்டை (பெங்களூரில் இருந்து நூறு கிலோமீட்டர். மண்ட்யாவில் (mandya) இருந்து பக்கம்)

12. தேவராய துர்கா (பெங்களூரில் இருந்து அறுபது கிலோமீட்டர்)


13. யாதகிரி குட்டா (ஹைதராபாதில் இருந்து அறுபது கிலோ மீட்டர், ஒன்றரை மணி நேரம் ஆகும் காரில்)
14. யானை மலை (மதுரைக்கு அருகில்)
15. கதிரி (அனந்தபூர் மாவட்டம், ஆந்திரா)

கீழே உள்ள இணைப்பில் நரசிம்மர் மூலவராக இருக்கும் தலங்கள் மட்டுமின்றி மேலும் பல தலங்கள் பற்றிய தகவல்களும் இருக்கின்றன. அரியுருவனின் அழகைப் பருக இந்த ஜென்மம் போதாது போலிருக்கிறது!